மகளிர் டெல்லி பிரீமியர் லீக் 2026 தொடரின் தொடக்கப் போட்டியிலேயே இளம் கிரிக்கெட் வீராங்கனை மெதாவி பிதூரி தனது விக்கெட் கொண்டாட்டத்தின் மூலம் இணையத்தில் வைரலாகியுள்ளார். சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணிக்காக விளையாடிய அவர், சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்திய பிறகு வித்தியாசமான முறையில் கொண்டாடினார். அவரது இந்த கொண்டாட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ‘6-7’ கொண்டாட்டம் என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மெதாவி பிதூரி தனது லெக் ஸ்பின் பந்துவீச்சால் கவனம் ஈர்த்தார். முக்கியமான கட்டத்தில் பேட்டரை ஆட்டமிழக்கச் செய்த அவர், உடனடியாக தனது தனித்துவமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், டெல்லி பிரீமியர் லீக் நிர்வாகமும் அந்த தருணத்தைப் பகிர்ந்து கவனம் ஈர்த்தது. குறிப்பாக இளம் தலைமுறை ரசிகர்கள் அவரது கொண்டாட்டத்தை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் சென்ட்ரல் டெல்லி அணி தோல்வியடைந்தாலும், மெதாவி பிதூரியின் வைரல் கொண்டாட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே 2025-ம் ஆண்டு தொடரின் இறுதிப்போட்டியில் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடியபோது மெதாவி பிதூரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது 2026 தொடரின் முதல் போட்டியிலேயே அவரது வித்தியாசமான கொண்டாட்டம் பேசுபொருளாகியுள்ளது. கிரிக்கெட்டுடன் சமூக வலைதள கலாச்சாரமும் இணைந்து வரும் நிலையில், மெதாவியின் இந்த ‘6-7’ கொண்டாட்டம் தொடர்ந்து ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
