சமூக வலைதளங்களில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தொடர்பான விவாதங்கள் அடிக்கடி எழுந்து வந்தாலும், பெற்றோர்களின் அலட்சியத்தால் நடக்கும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் , 15 வயது சிறுவன் ஒருவன் ஓட்டிச் சென்ற கார் மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், அந்தச் சமயத்தில் விபத்துக்குள்ளான காரில் ஒரு பச்சிளம் குழந்தை இருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நொய்டாவில் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, 15 வயது சிறுவன் ஒருவன் காரை இயக்கியுள்ளான். கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றொரு வாகனம் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் அந்த வாகனம் பலத்த சேதமடைந்தது.

 

View this post on Instagram

 

A post shared by The Siasat Daily (@siasatdaily)

விபத்தை ஏற்படுத்தியவுடன் அங்கிருந்து நிற்காமல் தப்பியோட முயன்றுள்ளான் அந்தச் சிறுவன். உடனே அங்கு திரண்ட பொதுமக்களும், பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளரும் உடனடியாக அவது காரை வழிமறித்துத் தடுத்து நிறுத்தினர். சற்று நேரத்தில் சிறுவனின் தாயாரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர், “எப்படி ஒரு சிறுவனை கார் ஓட்ட அனுமதிக்கலாம்?” என்று கோபமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குச் சிறுவனின் தாயாரோ, “எங்களிடம் வழக்கமாக வேலை செய்யும் டிரைவர் இன்று வரவில்லை. குடும்பத்தில் யாரையாவது கூட்டிவர வேண்டிய அவசரம் இருந்ததால், வேறு வழியின்றி என் மகனை வண்டியை ஓட்டச் சொன்னேன்” என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்.

அவர்களிடம் ஓட்டுநர் உரிமம்  உள்ளதா என்று பொதுமக்கள் கேட்டபோது, தாயும் மகனும் உரிமம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டனர். சிறுவனால் காரில் இருந்த பச்சிளம் குழந்தை உள்பட பலரின் உயிரும் பறிபோகும் நிலை ஏற்பட்டிருந்தும், பெற்றோர் அலட்சியமாகப் பதிலளித்தது நெட்டிசன்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். பெற்றோரைத்தான் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற தவறுகள் குறையும்” என்று ஒரு பயனர் கடுமையாக சாடியுள்ளார். மற்றொருவர், “சிறுவன் என்பதால் சட்டப்படி தப்பித்துவிடுவான், ஆனால் அவனது தாய்க்குப் பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்” என்று கோபமாகத் தெரிவித்துள்ளார். “13 வயது குழந்தையை எப்படி காரை இயக்க அனுமதிப்பீர்கள்? ஒருவேளை குழந்தைக்கு அல்லது அந்தக் குடும்பத்திற்கு ஏதாவது ஆகியிருந்தால் யார் பொறுப்பு?” என்று மற்றொருவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் விதிமுறைகளை மீறிச் சிறுவர்களை வாகனங்களை இயக்க அனுமதிப்பது என்பது வெறும் போக்குவரத்து விதிமீறல் மட்டுமல்ல; அது சாலையில் செல்லும் மற்ற பொதுமக்களின் உயிரோடு விளையாடும் விபரீத விளையாட்டு என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.