சமைக்கும் போது உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. தேங்காய்ப்பால், தயிர், தக்காளி பியூரி, வேகவைத்த உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு போன்ற எளிய பொருட்களைக் கொண்டு உப்பின் சுவையை எளிதாகச் சமநிலைப்படுத்தலாம். இதன்பின்னணியில் உள்ள எளிய அறிவியல் காரணங்களைப் புரிந்து கொள்வது சமையலை மேலும் எளிமையாக்கும்.
தேங்காய்ப்பால் மற்றும் தயிரில் உள்ள கொழுப்பு மற்றும் புரதச்சத்துக்கள் நாவில் சுவை உணரப்படும் விதத்தை மாற்றுகின்றன. தேங்காய்ப்பாலின் கிரீமி தன்மையும் தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்தின் லேசான புளிப்பும் உப்பின் கடுமையான சுவையைக் குறைக்கின்றன. அதேபோல் எலுமிச்சை சாறு மற்றும் வதக்கிய தக்காளி பியூரியில் உள்ள இயற்கையான சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் உப்பின் சுவையோடு போட்டியிட்டு நாவில் சரியான சுவைச் சமநிலையை உருவாக்குகின்றன.
சிறிதளவு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்ப்பதும் உப்பின் ஆதிக்கத்தைக் குறைக்க உதவும். இனிப்பும் உப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சுவைகள் என்பதால், சிறிதளவு இனிப்பு சேரும்போது உப்பின் உறைப்புத் தன்மை மறைந்துவிடும். அதேவேளையில் குழம்பில் கூடுதல் காய்கறிகள், தண்ணீர் அல்லது உப்பு இல்லாத ஸ்டாக் சேர்ப்பதன் மூலம் உணவின் ஒட்டுமொத்த அளவு அதிகரித்து, சோடியத்தின் அடர்த்தி நீர்த்துப்போய் சுவை சரியாகிறது.
வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கும்போது அதில் உள்ள ஸ்டார்ச் மற்றும் நீர்ச்சத்து கிரேவியின் தடிமனை அதிகரிப்பதுடன், வாயில் சுவை உணரப்படும் முறையை மாற்றி உப்பின் அளவைக் குறைவாகக் காட்டுகிறது. ‘ஃபூட் குவாலிட்டி அண்ட் பிரிஃபரன்ஸ்’ ஆய்வின்படி, உப்பின் சுவை என்பது அதன் அளவை மட்டுமே சார்ந்திராமல், அதனுடன் சேரும் மணம், இனிப்பு, புளிப்பு போன்ற பிற சுவைகளாலும் மாற்றமடைகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த எளிய முறைகள் உணவின் சுவையைச் சமன் செய்ய மட்டுமே உதவுமே தவிர, அதில் கலந்துள்ள சோடியத்தின் அளவை முழுமையாகக் குறைக்காது. எனவே உயர் இரத்த அழுத்தம் அல்லது சிறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள் சமைக்கும் போதே உப்பின் அளவில் கூடுதல் கவனத்துடன் இருப்பது உடலா ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
