திருவாரூர் மாவட்டத்தில் கீழ வீதி பகுதியில் திருவாரூர் இரயில் நிலையத்திற்கு மிக அருகிலேயே புகழ்பெற்ற சர்க்கரை விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் விநாயகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கியவாறு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் இத்தலத்து விநாயகரைத் தவறாமல் வழிபட்டு வந்துள்ளார். இவரை மனமுருகி வணங்கி நற்பலன்களைப் பெற்ற பக்தர்கள், நன்றிக்கடனாகச் சர்க்கரை படைத்து வழிபட்டதால் இவருக்குச் ‘சர்க்கரை விநாயகர்’ என்ற திருநாமம் உண்டானது. மேலும், மன்னரையும் அவரது வம்சத்தையும் வெற்றியுடன் பாதுகாத்த காரணத்தால் இவர் ‘சந்ததிகளைக் காக்கும் சர்க்கரை விநாயகர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
மேற்குப் திசை நோக்கிய ராஜகோபுரத்தைக் கொண்ட இக்கோயிலில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து தியானிக்கும் வகையில் விசாலமான மகாமண்டபம் அமைந்துள்ளது. வெள்ளிக் கவசத்தில் ராஜ அலங்காரத்துடன் மிளிரும் இந்த விநாயகரை அமைதியாக உற்று நோக்கித் தியானித்தால், அவர் நம்மிடம் நேரடியாகப் பேசுவது போன்ற ஒரு தெய்வீக உணர்வு ஏற்படும்.
இத்திருக்கோயிலின் தல விருட்சங்களாக அரச மரமும் நெல்லி மரமும் திகழ்கின்றன. திருமணத் தடைகள் அகலவும், குழந்தைப்பேறு கிட்டவும், நினைத்த காரியங்கள் தடையின்றி நினைவேறவும் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து விநாயகரிடம் பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.
தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் 108 தேங்காய்களை உடைத்தும், நெய் தீபங்கள் ஏற்றியும் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். மேலும் சர்க்கரை, முக்கனிகள் மற்றும் தங்க அபிஷேகம் செய்தும், அருகம்புல் மற்றும் செம்பருத்தி மலர்களைச் சாற்றி வழிபட்டாலும் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாக உள்ளது.
