மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், பலியானோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கேமரூன் நாட்டின் எல்லைக்கு அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டு வந்த இந்தத் தங்கச் சுரங்கம், வழக்கமான பணி நேரத்தின்போது எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு நடுவே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தற்போதைய சூழலில், காணாமல் போனவர்களை உயிருடன் மீட்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என அங்குள்ள மீட்புக் குழுவினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த பல தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வறுமையின் காரணமாகத் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வந்த இளம் ஆண்களும் பெண்களுமே இந்த விபத்தில் அதிக அளவில் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதுகாப்பற்ற முறையிலும், முறையான நவீனத் தொழில்நுட்ப கருவிகள் இல்லாமலும் செயல்பட்டதே இந்தச் சுரங்க விபத்துக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் திடீர் சரிவு குறித்து விசாரணை நடத்தவும், இந்தச் சுரங்கத்தை இயக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி இதுபோன்று ஆபத்தான முறைகளில் இயங்கும் சுரங்கங்கள் அதிகம் என்பதால், இதுபோன்ற கொடூர விபத்துகளும் உயிரிழப்புகளும் அங்கு அடிக்கடி நடக்கும் ஒரு தொடர்கதையாகவே மாறிவிட்டது.
