பாகிஸ்தான் அரசியலில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீரின் அதிகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கவுள்ளது. பாகிஸ்தானில் ‘பாதுகாப்புப் படைகளின் தலைவர்’ பதவிக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கும் புதிய மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

பாகிஸ்தான் பெடரல் அமைச்சரவை புதிய ‘பாதுகாப்புப் படைகள் சட்டம்-2026’-ன் வரைவுக்கும், ‘தேசிய கட்டளை ஆணையச் சட்டம்-2010’-ல் (NCA) திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலம், பாகிஸ்தானின் அணு ஆயுதக் கட்டமைப்பு மற்றும் ராணுவத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் CDF பதவியில் இருக்கும் ஆசிம் முனீரின் நேரடி ஆதிக்கம் இன்னும் பலமாகும். இருப்பினும், அணு ஆயுதங்களை இயக்குவதற்கான இறுதி அதிகாரம் தொடர்ந்து பிரதமரின் வசமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சட்டத்தின் மூலம் CDF பதவி மற்றும் அதன் தலைமையகத்தின் அதிகாரம், நிர்வாக அமைப்பு மற்றும் முப்படை ஒருங்கிணைப்புக்கான விரிவான சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த ‘கூட்டுக் தலைமைச் பணியாளர் குழுத் தலைவர்’ பதவி நீக்கப்பட்டு, CDF இன் கீழ் முப்படைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் மையப்படுத்தப்பட்டுள்ளது.

நெருக்கடி காலங்களில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான முடிவுகளில் தேசிய கட்டளை ஆணையம் முதன்மையாக இருந்தாலும், ராணுவ ரீதியான செயல்பாடுகளில் CDF மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட ‘தேசிய மூலோபாய கட்டளை’  தலைவர் பதவியின் பங்கு மிக முக்கியமானதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இரு மசோதாக்களும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அந்நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ மற்றும் பாதுகாப்புச் கட்டமைப்பின் உச்சபட்ச அதிகாரியாக ஆசிம் முனீர்  பிடி மேலும் வலுவடையும்.