அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் போரைத் தொடங்கியுள்ளார். ஈரானுடன் வர்த்தகத் தொடர்பில் இருக்கும் எந்த நாடாக இருந்தாலும், அவை அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். “எகனாமிக் டி-டே” என்று அழைக்கப்படும் இந்த மிரட்டல், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானை உலக நாடுகளிடமிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தி, அதன் பொருளாதாரத்தை முடக்குவதே அமெரிக்காவின் முக்கிய நோக்கமாகும். அமெரிக்காவின் இந்த மறைமுக எச்சரிக்கை, ஈரானுடன் அதிக வர்த்தகம் வைத்துளள இந்தியா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளை நேரடியாகக் குறிவைப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஈரானுக்கு எந்த வழியிலும் நிதி அல்லது வர்த்தக உதவிகள் கிடைக்கக் கூடாது என்பதில் ட்ரம்ப் தீவிரமாக உள்ளார்.

மத்திய கிழக்கில் ஆறு மாதங்களாகத் தொடரும் இந்தப் போரில், இடைக்காலத்தில் போடப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தமும் தோல்வியில் முடிடைந்துள்ளது. இதனால் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. உலக அளவில் எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ‘ஹார்முஸ்’ கடல் பாதையைத் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா முயன்று வருகிறது.

ஈரான் எக்காரணம் கொண்டும் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்பதில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார். இதனால் இந்த மோதல் ராணுவத் தாக்குதலையும் தாண்டி, சர்வதேச அளவில் ஒரு பெரிய பொருளாதார யுத்தமாக உருவெடுத்துள்ளது. ஈரானின் எண்ணெய் கடத்தல் மற்றும் மறைமுகப் பணப் பரிமாற்றங்களைத் தடுக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நிலைப்பாடு, எரிபொருள் தேவைக்காக ஈரானை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பெரிய வெளியுறவு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை ஈரானைப் பணிய வைக்குமா அல்லது உலக நாடுகளை அமெரிக்காவிற்கு எதிராகத் திருப்புமா என்பதுதான் இப்போது சர்வதேச அளவில் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.