இந்தியக் கல்லூரி மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காகக் கூகுள் நிறுவனம் ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கூகுளின் நவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ‘ஜெமினி’ மற்றும் ‘கூகுள் ஏஐ பிளஸ்’ சேவைகளை மாணவர்கள் ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மாதம்தோறும் 399 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த உயர்தரச் சேவையை, மாணவர்கள் தங்களின் படிப்புக்கும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் பயன்படும் வகையில் 12 மாதங்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்க கூகுள் முன்வந்துள்ளது. இதன் மூலம் கூகுளின் அதிநவீன ஏஐ கருவிகளை இந்திய மாணவர்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றிப் பயன்படுத்த அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த இலவசச் சலுகையின் கீழ் மாணவர்களுக்கு 400 ஜிபி அளவிலான கிளவுட் ஸ்டோரேஜ் வசதியும் கிடைக்கிறது. இதனை கூகுள் டிரைவ், போட்டோஸ் மற்றும் ஜிமெயில் போன்ற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். மேலும், கூகுள் சர்ச்சில் ஜெமினி ஏஐ வசதி, காட்சி உருவாக்கத்திற்கான ‘புளோ’ ஏஐ கருவி மற்றும் இசை உருவாக்கத்திற்கான சிறப்பு வசதிகளும் இதில் அடங்கும்.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ‘ஸ்டூடண்ட் ஹப்’ மற்றும் ‘ஸ்டடி நோட்புக்’ போன்ற சிறப்பு அம்சங்களையும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இவை மாணவர்கள் எந்தப் பாடத்தில் சிரமப்படுகிறார்களோ அதைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட படிப்புத் திட்டங்களை உருவாக்கிக் கொடுத்து ஆழமான ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

தகுதியுடைய கல்லூரி மாணவர்கள் கூகுள் ஒன் இணையதளத்திற்குச் சென்று இந்த ஓராண்டு இலவசச் சந்தாவைப் பெற்றுக் கொள்ளலாம். ஓராண்டுக்குப் பிறகு விருப்பமிருந்தால் கட்டணம் செலுத்தித் தொடரலாம் அல்லது ரத்து செய்து கொள்ளலாம். நவீனத் தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள கூகுள் வழங்கியுள்ள இந்தச் சலுகை மிகச் சிறந்த வாய்ப்பாகும்.