நாசா விஞ்ஞானிகள் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு, பூமிக்கு மிக அருகில் பூமி போன்ற அமைப்பைக் கொண்ட புதிய கிரகம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். நமது சூரிய குடும்பத்திலிருந்து வெறும் 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த உலகத்திற்கு ‘ஜி.ஜே 3378பி’எனப் பெயரிடப்பட்டுள்ளது. விண்வெளிப் பரப்பின் பிரம்மாண்டத்துடன் ஒப்பிடும்போது, இவ்வளவு அருகில் பூமி போன்ற சூழல் கொண்ட கிரகம் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கிரகம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ‘கோல்டிலாக்ஸ்’ எனப்படும் மிதமான தட்பவெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது. பூமியைப் போலவே பாறைகளால் உருவான இந்த கிரகத்தின் மேற்பரப்பில், தண்ணீர் திரவ நிலையில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும், இது பூமியை விட இரண்டு மடங்கு அதிக எடையைக் கொண்டுள்ளதால், வானியலாளர்கள் இதனை ஒரு ‘சூப்பர் எர்த்’ என்று குறிப்பிடுகின்றனர்.

இது ஒரு ‘சிவப்பு குள்ள நட்சத்திரத்தை’ சுற்றி வருவதால், சூரியனிடமிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெளிச்சத்தில் 90 சதவீதத்தை தன் தாய் நட்சத்திரத்திடம் இருந்து பெறுகிறது. டெக்சாஸ் மற்றும் அரிசோனாவில் உள்ள நவீன தொலைநோக்கிகள் மூலம், நட்சத்திரங்களின் லேசான நகர்வுகளைக் கூர்ந்து கவனித்து இந்த புதிய உலகம் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த கிரகத்தின் வளிமண்டலம் உயிரினங்களைக் காக்கும் கேடயமாக செயல்படுகிறதா அல்லது கதிர்வீச்சுகளால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதனைத் துல்லியமாகக் கண்டறிந்து, அங்கு ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய நாசா வரும் 2040-களில் அதிநவீன விண்வெளி ஆய்வகத்தை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

பால்வெளி மண்டலத்தின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகையில், 25 ஒளி ஆண்டுகள் என்பது மிக அருகாமையில் உள்ள ஒரு தூரமே ஆகும். இந்த முக்கியக் கண்டுபிடிப்பு, இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நாம் மட்டும் தனித்து வாழவில்லை, நமக்கு அப்பால் மற்றொரு உலகமும் உயிரினங்களும் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை விண்வெளி ஆர்வலர்களிடையே மேலும் வலுப்படுத்தியுள்ளது.