தெலங்கானா மாநிலம் கங்காபூர் பகுதியில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான முத்யம் ரெட்டி (42) மற்றும் கல்பனா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சிந்து என்ற இளைஞருடன் கல்பனாவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் கணவருக்குத் தெரியவந்ததால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தங்களது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த கல்பனா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து முத்யம் ரெட்டியை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர், ஆதாரங்களை அழிப்பதற்காக நள்ளிரவில் ஒரு ஜேசிபி (JCB) இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து, விவசாயத் தோட்டத்தில் பெரிய குழி தோண்டி கணவனின் உடலை புதைத்துவிட்டு, அந்த இடத்தை மண்ணும் கல்லும் போட்டு சமமட்டமாக்கினர். தங்களை யாரும் சந்தேகிக்கக் கூடாது என்பதற்காக, கடந்த மே 18-ஆம் தேதி கல்பனாவே காவல் நிலையத்திற்குச் சென்று, தன் கணவர் 9 நாட்களாகக் காணவில்லை என்று கண்ணீர் மல்க நாடகமாடி புகார் அளித்துள்ளார்.
ஆனால், ஆரம்பம் முதலே கல்பனா மீது சந்தேகமடைந்த போலீசார் அவரது மொபைல் போனின் ‘கால் டேட்டா ரெக்கார்டு’ (CDR) விவரங்களை ஆய்வு செய்தபோது, அவர் கள்ளக்காதலன் சிந்துவுடன் தினமும் மணிக்கணக்கில் பேசியது அம்பலமானது. உடனே சிந்துவை பிடித்து போலீசார் விசாரித்தபோது, இருவரும் சேர்ந்து கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டான்.
இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோட்டம் தோண்டப்பட்டு, அழுகிய நிலையில் இருந்த முத்யம் ரெட்டியின் சடலத்தை போலீசார் மீட்டனர். 12 ஆண்டு கால குடும்ப வாழ்க்கையை மூன்று மாத கள்ளக்காதலுக்காக சீரழித்த இந்த பெண்ணின் கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
