மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கௌசா பகுதியில் உள்ள அல்மாஸ் காலனியில், நள்ளிரவு நேரத்தில் திடீரென ஒரு வாயில்லா ஜீவனின் மரண ஓலம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தூக்கம் கலைந்து ஓடி வந்தனர். என்னவென்று பார்த்தபோது, அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஆடு ஒன்று, கீழே விழாமல் அதிர்ஷ்டவசமாக சுவரில் இருந்த ஏதோ ஒரு பகுதியில் மாட்டி அந்தரத்தில் தொங்கிக் கொண்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்தது.

ஒருவேளை பிடி நழுவி கீழே விழுந்தால் ஆட்டின் உயிர் பிரிவது நிச்சயம் என்ற இக்கட்டான சூழ்நிலையில், அங்கிருந்த சில துணிச்சலான இளைஞர்கள் சற்றும் யோசிக்காமல் களத்தில் குதித்தனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கயிறுகளின் உதவியோடு ஆட்டை லாவகமாகப் பிடித்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டு தரைக்குக் கொண்டு வந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by K Muzna (@save_our_strays_of_mumbra)

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வரும் இந்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சமயோசிதமாக செயல்பட்டு ஆட்டின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்களின் மனிதநேயத்தையும் தைரியத்தையும் பாராட்டி தள்ளி வருகிறார்கள்.

அதே நேரத்தில், இந்த சம்பவத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் கிளம்பியுள்ளன. ‘குடியிருப்புப் பகுதிகளில் ஆடுகளை வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’ என சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சிலர், ‘பலி கொடுப்பதில் இருந்து தப்பிக்க ஆடு தற்கொலைக்கு முயன்றது போல இருக்கிறது, ஆனால் இந்த இளைஞர்கள் அதைக் காப்பாற்றிவிட்டார்கள்’ என்றும், ‘தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே ஆடு ஓடியுள்ளது,

ஆனால் மீண்டும் மாட்டிக்கொண்டது’ என்றும் கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருகிறார்கள். எது எப்படியோ, ஆபத்தான சூழலில் ஒரு வாயில்லா ஜீவனின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்களின் இந்த செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.