நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. பல நகரங்களில் வெயில் 45 டிகிரியை தாண்டி பதிவாகி வருவதால், மதிய வேளையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட பயந்து நடுங்குகிறார்கள்.

அனல் காற்றும், சுட்டெரிக்கும் வெயிலும் மக்களை வாட்டி வதைக்கும் இந்தச் சூழலில், எப்படியாவது தங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் புதுப்புது வழிகளைத் தேடி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aadil khan (@foodiehindustani24)

அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் மாலேகானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெயிலில் இருந்து தப்பிக்க தனது ஸ்கூட்டரில் செய்துள்ள அசாத்திய ‘தேசி ஜூகாட்’ (உள்ளூர் கண்டுபிடிப்பு) சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

அந்த இளைஞர் தனது ஸ்கூட்டரில் ஒரு தண்ணீர் பாட்டில், சிறிய மோட்டார் பம்ப் மற்றும் பைப் நாசில்களை (பைப் முனைகள்) இணைத்து ஒரு அசத்தலான செட்டப்பை உருவாக்கியுள்ளார்.

ஸ்கூட்டரை ஓட்டத் தொடங்கும்போது, அந்த பைப் வழியாக மிக மெல்லிய பனி போன்ற நீர்த்துளிகள் ஸ்பிரே செய்யப்படுகின்றன. இந்த நீர்த்துளிகள் காற்றில் கலந்து ஓட்டுநரின் உடலில் படும்போது, ஏசி போன்ற ஒரு குளிர்ச்சியான உணர்வைத் தருகிறது.

அறிவியல் ரீதியாக ‘இவாபோரேட்டிவ் கூலிங்’ எனப்படும் இந்தத் தொழில் நுட்பத்தை, அந்த இளைஞர் மிக எளிமையாக தன் வண்டியில் பொருத்தி சொகுசாக பயணிப்பதை சாலையில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.