அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மிராண்டா மற்றும் ஜான் தம்பதியின் கதை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2023-ல் ஜானுக்கு ஏற்பட்ட ஒரு விபத்து, அவர்களின் குடும்ப வருமானத்தைப் பாதித்தது. அதுவரை மாதம் 2,300 டாலர் (சுமார் ரூ. 2 லட்சம்) வாடகை கொடுத்து வந்த அவர்களுக்கு, அந்தப் பணத்தைச் சமாளிப்பது பெரும் சுமையாக மாறியது.
இதையடுத்து, அவர்கள் தங்களது மூன்று படுக்கையறை கொண்ட வீட்டை காலி செய்துவிட்டு, ஒரு சாதாரண ஹோட்டல் அறைக்குக் குடிபெயர்ந்தனர். இப்போது வாரத்திற்கு வெறும் 307 டாலர் (சுமார் ரூ. 28,000) மட்டுமே செலவு செய்கின்றனர். இதில் மின்சாரம், தண்ணீர், இன்டர்நெட் மற்றும் பார்க்கிங் என அனைத்துச் செலவுகளும் அடங்கும். ஹோட்டல் அறையிலேயே சமைத்துச் சாப்பிடுவதால், வெளியூர் உணவுகளுக்கான செலவும் மிச்சமாகிறது.
இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிக்கும் இந்தத் தம்பதி, அந்தப் பணத்தை வைத்து எதிர்காலத்தில் ஒரு சொந்த நிலம் வாங்கி சிறிய வீடு கட்டத் திட்டமிட்டுள்ளனர். “பெரிய வீட்டை விட எளிமையான வாழ்க்கையே நிம்மதியானது” என்று மிராண்டா கூறுவது பலருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.
