இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீதச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களையே அதிர வைத்துள்ளது. தெருநாய்கள் கூட்டமாக நின்றுகொண்டிருக்கும் இடத்திற்குச் சென்ற ஒரு இளைஞர், யாரும் எதிர்பாராத விதமாக அந்த நாய்கள் மீது பாய்ந்து (Dive) அவற்றைப் பயமுறுத்தியுள்ளார். அமைதியாக இருந்த நாய்கள், அந்த இளைஞரின் திடீர் தாக்குதலால் மிரண்டு போய், அவரைப் பாய்ந்து கடிக்க ஆக்ரோஷமாகத் துரத்தியுள்ளன.
சமீப நாட்களாகத் தெருநாய்க் கடிக்குச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலியாகி வரும் நிலையில், அந்தப் பயமே இல்லாமல் ஒரு இளைஞர் இப்படி ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டது பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. நாய்களிடம் இருந்து தப்பிக்க அவர் அலறியடித்து ஓடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. “ஒரு நிமிடம் பிசகியிருந்தால் அந்த இளைஞரின் கதி என்னவாகியிருக்கும்?” எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெறும் விளம்பரத்திற்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து இந்த இளைஞர் செய்த செயல் இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது!
