கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘கிரிண்டர்’ என்ற செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆப் மூலமாக ஒரு வாலிபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அந்த வாலிபர் ஐ.டி ஊழியரை ஒரு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதை நம்பி அவரும் அங்குச் சென்றுள்ளார். ஆனால், அந்த வீட்டிற்குள் சென்றபோது அங்கு ஏற்கனவே மேலும் சிலர் மறைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஐ.டி ஊழியரிடம் மிரட்டிப் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த கும்பல் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. தொடர்ந்து, அவரது செல்போனைப் பறித்த அந்தக் கும்பல், ‘ஜிபே’ ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூ.1,400-ஐ தங்களது கணக்கிற்குப் பலவந்தமாகப் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளது.
அதோடு நிறுத்தாமல், மேலும் ரூ.20 ஆயிரம் பணம் எடுத்து வருமாறு அவரைக் கொடூரமாக மிரட்டி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஐ.டி ஊழியர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஐ.டி ஊழியரைத் தாக்கிப் பணம் பறித்தது தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு (19), கபில் மாதேஷ்வரன் (19) மற்றும் கார்த்திகேயன், கதிரவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, விஷ்ணு மற்றும் கபில் மாதேஷ்வரன் ஆகிய இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
