அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேசமயம், ஓபிஎஸ் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அதிமுகவில் இணைக்கும் பணிகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். “தலைமைக்கு மட்டுமே கதவுகள் மூடப்பட்டுள்ளன, தொண்டர்களுக்கு அல்ல” என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் முகாமில் உள்ள பலமான நிர்வாகிகளைத் தன் பக்கம் ஈர்ப்பதன் மூலம் அக்கட்சியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ், துணைச் செயலாளர் தண்டபாணி, பொருளாளர் ஜீவா செல்வம் மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கவிதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக்கொண்டனர். ஓபிஎஸ் தரப்பிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை வலுப்படுத்த மேற்கொண்டு வரும் முக்கிய நகர்வாகவும் இது பார்க்கப்படுகிறது.
