சென்னையில் ஓடும் ரயில்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வியாசர்பாடி, கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் தண்டவாள ஓரம் இருக்கும் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசுவதால் பயணிகளுக்குக் காயம் ஏற்படுவதுடன் ரயில்வே சொத்துக்களும் சேதமடைகின்றன.
இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரித்தும், இதுபோன்ற செயல்கள் நிறுத்தப்படவில்லை. இந்த நிலையில், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே சென்ற மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியுள்ளனர்.
இதில் பார்த்திப கண்ணன் என்ற இளைஞரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் தையல் போடப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கல் வீச்சில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
