இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருவதால், இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இது குறித்து வீடியோ வெளியிட்ட ஜேம்ஸ் வசந்தன், “இது தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் எந்தஅரசியல் காரணமும் இல்லை என்று காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னையில் உள்ள உணவகத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் சாப்பிடச் சென்றபோது, சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் வாசலில் காரை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளரே காரின் கண்ணாடியை உடைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தச் சம்பவம் தனிப்பட்ட மோதலால் நடந்ததே தவிர, அரசியல் ரீதியான தாக்குதல் அல்ல என்பது உறுதியாகியுள்ளது.
