மகத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை பீகாரின் துனிக்கஞ்சி மற்றும் ரகுநாத் போர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டாக பிரிந்தது. இந்த நிலையில் S-6, S-7 ஆகிய பெட்டிகளுக்கு இடையேயான இணைப்பு உடைந்தது. ரயில் ஓடிக்கொண்டிருந்த போது இரண்டு பகுதிகளாக பிரிந்ததால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். அது மட்டும் இல்லாமல் இணைப்பு உடைந்ததால் காற்று குழாயில் வெடிப்பு ஏற்பட்ட பயங்கர சத்தம் வந்தது.

இதனால் ரயில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் மற்றும் ஸ்லீப்பர் கட்டைகள் பறந்தது. ரயில் தடம் புரண்டு விட்டதா என பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். இதற்கிடையே ஓட்டுனர் ரயிலை நிறுத்திவிட்டார். சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஓடி சென்று ரயில் நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த ரயிலை இணைத்து மீண்டும் இயக்கும் பணியில் ரயில்வே குழுவினர் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.