சென்னையில் தனியாக இருந்த மூதாட்டி பணத்திற்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர்  பகுதியில் வசித்து வந்த பொன்னம்மாள் என்ற மூதாட்டி, அண்மையில் தனது நிலத்தை விற்ற விவகாரம் தொடர்பாக ஆட்டோவில் பேசிக்கொண்டு சென்றதே அவருக்கு வினையாக முடிந்துள்ளது.

ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகள், மூதாட்டியின் வீட்டில் பணம் இருப்பதை அறிந்து திட்டமிட்டு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பொன்னம்மாளின் கை, கால்களைக் கட்டிப்போட்டு, கழுத்தை நெரித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு இளைஞர்கள் பதற்றமே இல்லாமல் கொலையைச் செய்துவிட்டு ஆட்டோவில் தப்பிச் செல்லும் காட்சிகள் கிடைத்துள்ளன.

அந்த ஆட்டோ செல்லும் வழியில் ஒரு பைக்கின் மீது மோதிய ஆதாரத்தை வைத்து, கொலையாளிகளைப் பிடிக்கப் போலீசார் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.