தமிழர் தந்தை என போற்றப்படும் சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“தினத்தந்தி பத்திரிகையை நிறுவி, தமிழ் மொழியை பட்டியிலிருந்து தொட்டிவரை பரப்பிய பெருமை சி.பா. ஆதித்தனாருக்கு உரியது. சட்டப்பேரவையின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். அவர் அமர்ந்த நாற்காலியில் நான் அமர்ந்தேன். அதை புரட்சித்தலைவி ஜெயலலிதா அளித்த பெருமை என நினைக்கிறேன். இது என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஓர் நினைவாகும்.”

அதனைத் தொடர்ந்து, அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய மறைந்த தலைவர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பிய கருத்துகள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்:

“அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட மக்களால் மதிக்கப்படும் தலைவர்களை விமர்சிக்க முடியாது. அவர்களை பற்றிய பேச்சுகளை சீமான் உடனே நிறுத்த வேண்டும். இல்லை என்றால், அவரைப் பற்றி எங்களுக்கும் கண்ணா பின்னா என்று கூறி சிரிக்கத் தெரியும். அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதே எங்களது விருப்பம்” என அவர் தெரிவித்தார். மேலும் சனியில் எத்தனையோ விதம் இருந்தாலும் ஒட்டுமொத்த சனியின் உருவமே சீமான் தான் என்றும் தேவையில்லாமல் மறைந்த தலைவர்கள் பற்றி பேசி அதிமுகவிடம் வாங்கி கட்டிக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.