திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில் அதிகாரப் பங்கீடு வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல்லில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் எப்போதுமே தனிப்பெரும் கட்சி ஆட்சிதான் நடைபெறும்; கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உறுதியாக இருப்பதாகவும், ஆட்சியில் பங்கு கொடுக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் அவர் பேசியது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

​அமைச்சரின் இந்தப் பேச்சுக்குப் பதிலடி கொடுத்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி ஆட்சி இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து மட்டுமே என்று கூறியுள்ளார். “கூட்டணியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால் இறுதி முடிவை ராகுல் காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலினும் ஆலோசித்துத்தான் எடுப்பார்கள்” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கூட்டணிக்குள் அதிகாரப் பங்கீடு குறித்து இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களே முடிவு செய்வார்கள் என்பதால், ஐ.பெரியசாமியின் பேச்சைத் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பது போல செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.