சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, கர்ப்பிணிப் பெண்கள் இருக்கும் வார்டு அருகிலேயே ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகள் இன்று உயிரைக் காக்கும் இடமாக இல்லாமல், ரவுடிகளின் கொலைக்களமாகவும், கஞ்சா வளர்க்கும் இடமாகவும் மாறியிருப்பது வேதனை அளிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதாகவும், காவல்துறை தன் கட்டுப்பாட்டில் இருந்தும் முதலமைச்சர் இதைக் கவனிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாகப் பொய் சொல்லிக்கொண்டு, சிலம்பம் சுற்றுவது மற்றும் கார் ஓட்டுவது போன்ற ‘ரீல்ஸ்’ எடுத்து விளையாடிக்கொண்டிருக்கிறார் என இபிஎஸ் சாடியுள்ளார். நிரந்தர டிஜிபி-யைக் கூட நியமிக்க முடியாத இந்த விடியா அரசையும், காவல்துறையையும் நம்பி இனி பயன் இல்லை என்பதால், மக்கள் தங்கள் பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இன்னும் மூன்று மாதங்களில் இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் ஒரு முடிவு வரும் என்றும் அவர் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
