மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் இளைய தலைமுறை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள கடுமையான கருத்துக்கள் தற்போது தேசிய அளவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நடத்திய இந்த போராட்டங்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மீது கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்திருந்தார். குறிப்பாக, போராட்டத்தில் கலந்துகொண்ட இளம் தலைமுறையினரை அவர் “ஜென்ரேஷன் கட்டர்” என்று கடுமையாகச் சாடியதுடன், அவர்களின் குடும்ப வளர்ப்பையும் கேள்விக்குள்ளாக்கினார்.
கங்கனாவின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவித்தார். கங்கனாவின் இந்த வார்த்தைகள் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் பேசுவது போல இருப்பதாகவும், அவர் தனது தொகுதியில் தினமும் வேலை செய்வதைப் பார்த்து அலுத்துக்கொண்ட பழைய வீடியோக்களைச் சுட்டிக்காட்டி அவரது நாடாளுமன்றப் பணிகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும், தற்போதைய போராட்டத்தின் மூலம் கங்கனா விளம்பரம் தேட முயல்வதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
சௌரவ் தாஸின் இந்தக் விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாகவே கங்கனா ராவத் அனல் பறக்கப் பதிலடி கொடுத்தார். சௌரவ் தாஸ் தன்னை ஒரு மாணவன் என்று கூறிக்கொள்வதை கேலி செய்த கங்கனா, “அவர் உண்மையான மாணவன் அல்ல, முற்றிலும் வேலையில்லாத ஒரு நபர்” என்று சாடினார். உனக்கு 28 வயது ஆகிறது. உன்னுடைய வயதில் எனக்கு இரண்டு தேசிய விருதுகள் இருந்தன; நான் நடிகை, தயாரிப்பாளர், தொழில்முனைவோர் எனப் பல வேலைகளையும் பார்த்துக் கொண்டு பிசியாக இருக்கிறேன், ஆனால் உங்களைப் போன்ற வேலையில்லாதவர்களுக்கு எங்களின் உழைப்புப் புரியாது” என்று கடுமையாகத் தாக்கினார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்று அரசு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நிலையிலும், கங்கனா ராவத் – சௌரவ் தாஸ் இடையேயான இந்த வார்த்தைப் போர் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. கங்கனா பயன்படுத்திய தரக்குறைவான வார்த்தைகளுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் சமூக வலைதளப் பயனாளர்களும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
