உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது கார் ஒன்று ஏறி இறங்கிய கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி இரவு நடந்த இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி வைரலானதை அடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்தில் ரெய்ஸுடின் என்பவர்படுகாயமடைந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு ரெய்ஸுடின் தனது வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது திடீரென ஏறி இறங்கியதுடன், நிற்காமல் கண்இமைக்கும் நேரத்தில் தப்பியோடியுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு உடனடியாக ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காரின் அடியில் சிக்கித் தவித்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ரெய்ஸுடினின் மகள் ஷபானா காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். ஓட்டுநர் வேண்டுமென்றே தன் தந்தை மீது காரை ஏற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள ரெய்ஸுடின், விபத்து நடந்த மறுநாள் காலையில் வந்த ஓட்டுநரின் தந்தை தங்களை ஆபாசமாகத் திட்டியதாகவும், “போலீசில் புகார் கொடுத்தால் ஒன்றும் செய்ய முடியாது, என் வரலாற்றைத் தெரிந்துகொண்டு பேசுங்கள்” என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய சப்-இன்ஸ்பெக்டர் ராம்கிஷன், பாதிக்கப்பட்ட தரப்பிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரையும் ஓட்டுநரையும் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தினார். முழுமையான விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
