மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினி மாவட்டம் பத்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே அடுத்தடுத்து 14 நாகப்பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால், அப்பகுதி மக்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாகப் பிடிக்கப்பட்ட அனைத்துப் பாம்புகளும் பாதுகாப்பான முறையில் காட்டுப்பகுதிக்கு அருகில் கொண்டு சென்று விடப்பட்டாலும், ஒரே வீட்டிலிருந்து இவ்வளவு அதிகமான பாம்புகள் எப்படி வெளியே வந்தன என்ற கேள்வி அனைவரையும் உலுக்கியுள்ளது.
அதாவது நந்தகிசோர் சௌகான் என்பவர் தனது மனைவியுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை முதல் இரண்டு அடி நீளம் கொண்ட மூன்று கறுப்பு நாகப்பாம்புகள் வெளியேறியுள்ளன. அப்போது துணிச்சலுடன் செயல்பட்ட அவர், அந்தப் பாம்புகளைப் பாதுகாப்பாகப் பிடித்து வெளியே விட்டார். ஆனால், செவ்வாய்க்கிழன்று அதே வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் மேலும் 11 நாகப்பாம்புகள் வெளியேறியதால், குடும்பத்தினருக்கும் அக்கம் பக்கத்து மக்களுக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
உடனடியாகச் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், உரிய நேரத்தில் யாரும் உதவ வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனது சொந்தத் தைரியத்தையே நம்பி களமிறங்கிய நந்தகிசோர் சௌகான், அனைத்துப் பாம்புகளையும் தானே பாதுகாப்பாகப் பிடித்து நகருக்கு வெளியே உள்ள வனப்பகுதியில் விட்டார். இருப்பினும், வீட்டின் வேறு பாம்புகள் மறைந்துள்ளதா என்று குடும்பத்தினர் பயத்துடனும் உஷாராகவும் ஒவ்வொரு மூலையாகச் சோதித்து வருகின்றனர். இதுபோன்று ஏராளமான விஷப்பாம்புகள் ஒரே இடத்தில் சிக்கியது இதுவே முதல்முறை என்பதால் மக்கள் பதறிப்போயுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் ராதேஷ்யாம் பாஞ்சால் மற்றும் பல் மருத்துவர் பரமானந்த் கவுர் கூறுகையில், அந்த வீட்டின் ஏதாவது ஒரு மறைவான குழியில் நாகப்பாம்பு முட்டையிட்டிருக்க வேண்டும்; அந்த முட்டைகளிலிருந்து பொரிந்து வெளிவந்த குஞ்சுகள்தான் தற்போது ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர். இது ஒருவேளை சாதாரண நிகழ்வாக இருந்திருந்தால் சுற்றியுள்ள வீடுகளிலிருந்தும் பாம்புகள் வந்திருக்கும், ஆனால் இந்த ஒரு வீட்டிலிருந்து மட்டுமே பாம்புகள் வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் பெரிய ஆபத்துகள் ஏதும் நேராமல் இருக்க, வீட்டின் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள இடங்களை வனத்துறையினர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தீவிரமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
