உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், வெறும் 400 ரூபாய் தகராறு காரணமாக 15 வயது சிறுவன் அவனது சொந்தச் சசோதரனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி மாவட்டத்தின் கஜ்ராஹா புசுர்க் கிராமத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம், மனிதநேயத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. உயிரிழந்த 15 வயது சிறுவன் அங்கித் அஹிர்வார், குற்றவாளியான தனது சகோதரனுடன் தினசரி வேலைக்குச் சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 18ஆம் தேதி மாலை அங்கித் அஹிர்வார் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அடுத்த நாளே கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து அங்கித்தின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கையில் அவரது தலையில் பலத்த பாறாங்கற்களால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது உறுதியானதை அடுத்து, காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.
இறந்த சிறுவனின் செல்போன் கால் விவரங்களை ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று அவனது சகோதரன் ஆஷிக் அஹிர்வாருடன் பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது. இருவரும் பதுரா கிராமத்தில் ஒன்றாகக் கூலி வேலை செய்து வந்தனர். இதனையடுத்து ஆஷிப்பிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவன் அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டான்.
விசாரணையில், கூலிப் பணமான மொத்தம் 1,200 ரூபாயில் 400 ரூபாய் தனக்குச் சேர வேண்டியது என்று ஆஷிக் கேட்டுள்ளான். ஆனால் அங்கித் பணத்தைப் பெற்றதை மறுத்துள்ளான். சம்பவத்தன்று கிணற்றின் அருகே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஆஷிக், அங்கிருந்த பாறாங்கல்லை எடுத்து அங்கித்தின் தலையில் பலமுறை தாக்கிப் படுகொலை செய்துள்ளான். மேலும், தடயங்களை மறைப்பதற்காகச் சடலத்தைக் கிணற்றில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளான். காவல்துறையினர் குற்றவாளி ஆஷிக் அஹிர்வாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் மௌனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
