பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், சமூக வலைதளங்களில் மலிவான விளம்பரம் தேடுவதற்காகச் செய்யப்படும் விபரீத செயல்களின் வரிசையில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அமிர்தசரசில் புகழ்பெற்ற ஜிம் பயிற்சியாளர் தேஜ்பீர் சிங் ரானா என்ற ‘ரானாராக்’ என்பவரது 8 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத் தீ போல பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வைரல் வீடியோவில், கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு தனது வியர்வையால் நனைந்த டி-சர்ட்டைப் பிழிந்து, தனது சீடனைப் குடிக்க சொல்லும் அதிர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் அந்த வீடியோவில், “இதை நீ குடித்தால் பலமாகிவிடுவாய்” என்று அவர் கூறுவதும் பதிவாகியிருந்தது.
இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் பொதுமக்களின் கோபம் வெடித்தது. சமூக வலைதளப் பயனாளர்கள் ஜிம் பயிற்சியாளரை மிகக் கடுமையாக விமர்சித்ததுடன், அவரது இந்த அருவருப்பான செயலையும் கண்டித்து வசைபாடத் தொடங்கினர். நிலைமை மோசமானதை அடுத்து, விவகாரம் கையை மீறிச் செல்வதை உணர்ந்த ஜிம் பயிற்சியாளர் தேஜ்பீர் சிங் ரானா உடனடியாக மற்றொரு புதிய வீடியோவை வெளியிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இந்தச் செயலால் யாருடைய உணர்வுகளாவது புண்பட்டிருந்தால் தான் கை கூப்பி மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்தார்.
View this post on Instagram
மேலும் தன் தரப்பு நியாயத்தை விளக்கிய அவர், தன் உடற்பயிற்சி மாணவனும் தோழனுமான ராஜனிடம் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற வேண்டாம் என்று தான் ஏற்கனவே எச்சரித்திருந்ததாகக் கூறினார். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்ததாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பாஸ்வேர்ட் ராஜனிடம் இருந்ததாலும் அவரே தவறுதலாக இந்த ரீலை அப்லோட் செய்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார். சீக்கியர்களின் புனித நூலான குர்பானியைக் குறிப்பிட்டு, “மனிதன் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் அல்ல” என்று குறிப்பிட்ட ரானாராக், வீடியோவை மறுமுறை தான் பார்த்தபோது தனக்கே அது மிகவும் மோசமாகவும் விசித்திரமாகவும் தோன்றியதாக ஒப்புக்கொண்டார்.
மன்னிப்பு கோரிய இந்த வீடியோவில், பயிற்சியாளருடன் சேர்ந்து சர்ச்சைக்குரிய அந்த மாணவன் ராஜனும் தோன்றிப் பேசினான். ரானா தன்னை வீடியோவை வெளியிட வேண்டாம் என்று தடுத்ததாகவும், ஆனால் அப்போது தனக்கு அது ஒரு சாதாரண மற்றும் பொழுதுபோக்கு வீடியோவாகத் தோன்றியதால் தவறுதலாகப் பதிவிட்டுவிட்டதாகவும் அவன் ஒப்புக்கொண்டான். எவ்வாறாயினும், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை உடனடியாக நீக்கிவிட்டதாகத் தெரிவித்த ரானாராக், எதிர்காலத்தில் முழுப்பொறுப்புடனும், குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான நல்ல கன்டென்ட்களை மட்டுமே வெளியிடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.
