மழைக்காலம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த காலங்களில் கொசுக்களால் பரவும் நோய்கள் பற்றி மட்டுமே நாம அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கொசுக்களை விட அளவிலும் சிறியதாக இருந்து, குழந்தைகளுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘மணல் ஈக்கள்’ பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இருப்பதில்லை. மணல் ஈக்கள் கடிப்பதன் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள், குறிப்பாகக் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குப் பெரிய சவாலாக மாறுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மணல் ஈக்கள் என்பவை கொசுக்களை விட மிகச் சிறிய அளவிலான பூச்சிகளாகும். இவை பொதுவாகச் ஈரப்பதம் நிறைந்த பகுதிகள், பழைய சுவர்களில் உள்ள விரிசல்கள், மண் தரைகள் மற்றும் கால்நடைகள் வாழும் இடங்களில் அதிக அளவில் வாழ்கின்றன. இந்த மணல் ஈக்கள் கடிப்ப மூலம் ‘லீஷ்மேனியாசிஸ்’ அல்லது ‘கலா-அஸார்’ எனப்படும் ஆபத்தான ஒட்டுண்ணித் தொற்று மனிதர்களுக்குப் பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்தத் தொற்று மிக விரைவாகப் பரவி தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தத் தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான காய்ச்சல், பசியின்மை, உடல் எடை கணிசமாகக் குறைதல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், இரத்த சோகை போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும், தோல் நிறம் கருப்பாக மாறுவது அல்லது தோலில் புண்கள் ஏற்படுவதும் இதன் முக்கிய அறிகுறிகளாகும். ஆரம்பத்திலேயே இந்த அறிகுறிகளைக் கண்டறிந்து மருத்துவரிடம் செல்லாவிட்டால், இது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, மணல் ஈக்கள் பெருகுவதைத் தடுக்க வீடும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் எப்போதும் தூய்மையாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும். வீட்டின் சுவர்களில் உள்ள விரிசல்களை அடைப்பதோடு, குழந்தைகள் விளையாடும் போது உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணியச் செய்ய வேண்டும். மாலையில் வீட்டின் ஜன்னல்கள், கதவுகளை மூடி வைப்பதும், பூச்சிக்கொல்லி மருந்துகள் அல்லது ஈ விரட்டிகளைப் பயன்படுத்துவதும் மணல் ஈக்கள் கடிப்பதில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உதவும் சிறந்த வழிகளாகும்.
