பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தொடக்கப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த வைரல் வீடியோவில், இரண்டு ஆசிரியர்கள் வகுப்பறையின் உள்ளேயே பெஞ்சுகளில் கால் நீட்டி அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. ஆசிரியர்களின் இந்த அலட்சியத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவர்கள், படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டுத் தங்கள் பைகளை எடுத்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

வைரல் வீடியோவில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் தினேஷ் குமார் மண்டல் மற்றும் தேவேந்திர சர்தார் என உள்ளூர் மக்கள் அடையாளம் கண்டுள்ளனர். பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் இந்த மோசமான நிலையைக் கண்டதும், வகுப்பறையின் சூழல் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதனால் பல குழந்தைகள் எந்தவிதப் பாடமும் படிக்காமல் சோகத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் பொதுமக்களும் கல்வித்துறையின் மீது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆசிரியர்களே பொறுப்பின்றித் தூங்கினால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

இந்தப் பள்ளியில் சுமார் 140 மாணவர்கள் படித்து வரும் நிலையில், தினமும் சராசரியாக 100 மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 7 ஆசிரியர்கள் பணியாற்றும் இத்தகைய ஒரு பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இப்பகுதியில் உள்ள மற்றொரு அரசுப் பள்ளியில் மதிய உணவு தொடர்பான சர்ச்சைகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த புதிய வீடியோ கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள், வைரல் வீடியோ குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். விசாரணையில் இந்த வீடியோ உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.