இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் கணினி, மடிக்கணினி மற்றும் கைபேசி திரைகளைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கண் சோர்வு, மங்கலான பார்வை மற்றும் கண்கள் வறட்சி அடைதல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாகப் பலரும் சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.
இருப்பினும், தினமும் சில எளிய யோகாசனங்கள் மற்றும் கண் பயிற்சிகளைத் தவறாமல் செய்து வருவதன் மூலம் கண் தசைகளை வலுப்படுத்தி, இரத்த ஓட்டத்தைச் சீராக்க முடியும். யோகாசனங்கள் செய்வதன் மூலம் கண் நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி கிடைத்து, பார்வைத்திறன் மேம்படுவதுடன் கண்ணாடியின் பவர் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்த முடியும் என யோகா நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, ‘த்ராடகா’ எனப்படும் தீபத்தைப் பார்த்துச் செய்யும் கவனம் செலுத்தும் பயிற்சி, கண் தசைகளை வலுப்படுத்தவும் பார்வைக் கூர்மையை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும், ‘சர்வாங்காசனம்’ மற்றும் ‘ஹலாசனம்’ போன்ற ஆசனங்களைச் செய்யும்போது தலை மற்றும் கண் பகுதிக்கு இரத்த ஓட்டம் தடையின்றிப் பாய்கிறது. இது கண் நரம்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து பார்வையைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
இதுமட்டுமன்றி, உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்துக் சூடாக்கி கண்களின் மீது வைக்கும் ‘பாமிங்’ பயிற்சி மற்றும் கண்களை வெவ்வேறு திசைகளில் சுழற்றும் பயிற்சிகளும் கண் சோர்வை உடனடியாகப் போக்கக்கூடியவை. தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த யோகாசனப் பயிற்சிகளைச் செய்து வந்தால், டிஜிட்டல் திரைகளால் ஏற்படும் கண் பாதிப்புகளில் இருந்து தப்பித்து, கண் பார்வையை ஆரோக்கியமாகவும் கூர்மையாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
