சமையலில் நாம் பயன்படுத்தும் எண்ணெயின் அளவைக் குறிப்பிட்ட அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை கடுமையான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு நபர் நாளொன்றுக்குச் சமைப்பதற்கான எண்ணெயை 20 முதல் 30 கிராமுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவில் அதிகப்படியான கொழுப்பைச் சேர்ப்பது உடல் பருமன் அதிகரிப்பு, தேவையற்ற கலோரி சோ்க்கை மற்றும் இதய நோய் அபாயம் போன்ற பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பதார்த்தங்களைப் பொரித்தெடுத்த மீதமுள்ள எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்துவதை மக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்று உணவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. ஒருமுறை காய்ச்சிய எண்ணெயைத் திரும்பவும் சூடாக்கும்போது அதில் மனித உடலுக்குத் தீமை விளைவிக்கக்கூடிய ஆபத்தான டிரான்ஸ் கொழுப்புகளும், நச்சுப் பொருட்களும் அதிகளவில் உருவாவதாக அறிவியல் பூர்வமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தினசரி சமையல் பழக்கவழக்கங்களில் மேற்கொள்ளப்படும் இது போன்ற சிறிய அளவிலான மாற்றங்களே உடலின் கலோரி அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். உடல் பருமன் இல்லா ஆரோக்கியமான நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உணவுப் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியமானதாகும்.
