குடும்பப் பொறுப்புகள், பணிச்சுமை மற்றும் எதிர்காலத் திட்டமிடுதல் எனத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை உழைப்பிலேயே செலவிடும் பல ஆண்கள், தங்களது சொந்த உடல்நலனைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். “இது சாதாரண வலிதான், தானாகச் சரியாகிவிடும்” என்று சொல்லி அலட்சியப்படுத்தும் சில சின்னச் சின்ன அறிகுறிகள், பிற்காலத்தில் ஆபத்தான நோய்களின் ஆரம்பக்கட்ட எச்சரிக்கையாக இருக்கலாம். எனவே, ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சில குறிப்பிட்ட அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.
எந்தவித உணவுக் கட்டுப்பாடோ அல்லது உடற்பயிற்சியோ செய்யாமல் திடீரென உடல் எடை குறைவது தைராய்டு, சர்க்கரை நோய் அல்லது ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். அதேபோல, தொடர்ச்சியான மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் மலத்தில் ரத்தம் வருவது போன்ற செரிமானப் பிரச்சனைகள் இருந்தால், அதை உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும். மேலும், பல நாட்கள் நீடிக்கும் முதுகு வலி என்பது வெறுமனே தசை பிடிப்பு மட்டுமல்லாமல், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.
மார்பில் ஏற்படும் லேசான அசௌகரியம் அல்லது அழுத்தம் போன்ற உணர்வைக் கடந்து போவது உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும். இதயம் தொடர்பான பிரச்சனைகளின் முக்கிய அறிகுறியே இந்த மார்பு வலிதான். அதேபோல், லேசாக நடக்கும்போதோ அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போதோ அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அது இதயம் அல்லது நுரையீரல் சார்ந்த பாதிப்புகளின் எச்சரிக்கையாக இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் ஆகியவை புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் அல்லது நீரிழிவின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, எப்போதும் உடல் சோர்வாகவும் ஆற்றல் இல்லாமலும் உணர்ந்தால், அது இரத்த சோகை, தூக்கமின்மை அல்லது தைராய்டு பிரச்சனைகளின் காரணமாக இருக்கலாம். இதோடு குடும்ப மற்றும் வேலை அழுத்தத்தால் ஏற்படும் தொடர்ச்சியான மன அழுத்தம், பதற்றம் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கி இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
இந்த அறிகுறிகள் அனைத்துமே கடுமையான நோய்களைத்தான் குறிக்கும் என்று பயப்பட வேண்டியதில்லை என்றாலும், அவை தொடர்ந்து நீடித்தால் அல்லது தீவிரமடைந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. உடனே தகுந்த மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையும் பரிசோதனையும் செய்துகொள்வதே பின்நாட்களில் வரக்கூடிய பெரிய ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் சிறந்த வழியாகும்.
