நமது வீட்டின் அழகுக்கும் தினசரி பயன்பாட்டிற்கும் கண்ணாடி மிகவும் அவசியமான ஒன்றாகும். இருப்பினும், வீட்டின் எந்தெந்த இடங்களில் கண்ணாடியைப் வைக்க வேண்டும் என்பதில் வாஸ்து சாஸ்திரப்படி சில முக்கிய விதிகள் உள்ளன. குறிப்பாக, படுக்கையறையில் கண்ணாடியை எந்த இடத்தில் வைக்கிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக, இரவில் தூங்கும் போது படுக்கையில் இருக்கும் நபரின் பிம்பம் கண்ணாடியில் நேரடியாகப் பிரதிபலிப்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி அசுபமாகக் கருதப்படுகிறது. நீங்கள் தூங்கும் போது உங்களது உருவம் கண்ணாடியில் தெரியும்படி இருந்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை பெருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் இரவில் நிம்மதியான தூக்கம் கெடுவதோடு, தேவையில்லாத பயமும் பதற்றமும் உருவாகும்.
மேலும், படுக்கைக்கு நேராகக் கண்ணாடி இருப்பது கணவன்-மனைவி இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி, மனஸ்தாபங்களை அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது. அதுமட்டுமின்றி, இத்தகைய அமைப்பானது வீட்டில் தேவையற்ற மருத்துவச் செலவுகளையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி, குடும்ப அமைதியைச் சீர்குலைக்கக்கூடும்.
எனவே, படுக்கையறையில் கண்ணாடியைப் படுக்கைக்கு நேராக வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை கண்ணாடியை வேறு இடத்திற்கு மாற்ற முடியாத சூழல் இருந்தால், இரவில் தூங்கச் செல்வதற்கு முன் அந்தக் கண்ணாடியை ஒரு துணியைக் கொண்டு மூடி வைப்பது நல்ல தீர்வாகும். இத்தகைய சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல்களைத் தவிர்த்து, வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் நிலவச் செய்ய முடியும்.
