கொரோனா காலத்திற்குப் பிறகு ‘வர்க் ஃப்ரரம் ஹோம்’  எனப்படும் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை பல நிறுவனங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டது. அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே பணிபுரிவது பலருக்கும் சௌகரியமாக இருந்தாலும், அதில் பல சவால்களும் ஒளிந்துள்ளன. குறிப்பாக, பெரும்பாலான மக்கள் தங்களது வீட்டின் படுக்கையறையையே  அலுவலக மேஜையாக மாற்றிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.

முதல் பார்வையில் படுக்கையில் அமர்ந்து வேலை செய்வது மிகவும் சுகமாகவும் வசதியாகவும் தோன்றினாலும், இது நாளடைவில் உங்களது தொழில்முறை வாழ்க்கையையும் தனிப்பட்ட ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். படுக்கை என்பது ஓய்வெடுப்பதற்கும் உறங்குவதற்கும் உரிய இடமாகும். அங்கே அமர்ந்து வேலை செய்யும்போது, மூளையானது வேலையையும் ஓய்வையும் பிரித்தறிய முடியாமல் குழப்பமடைந்து, கவனச்சிதறலையும் சோம்பலையும் ஏற்படுத்துகிறது.

மேலும், படுக்கையில் அமர்ந்து அல்லது சாய்ந்தபடி மடிக்கணினியைப்  பயன்படுத்தும்போது உங்களது உடலமைப்பு கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை பிடிப்பு மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உங்களது சுறுசுறுப்பைக் குறைத்து, உற்பத்தியாக்கல் திறனைச்  சீரழித்துவிடும். இது பணிபுரியும் இடத்தில் உங்களது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பெரிய தடையாக மாறக்கூடும்.

எனவே, வீட்டில் இருந்து வேலை செய்தாலும், உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை  ஒதுக்கி, மேஜை மற்றும் நாற்காலியைப் பயன்படுத்திச் சரியான முறையில் அமர்ந்து பணிபுரிவது அவசியம். இதன் மூலம் கவனக்குவிப்பு அதிகரிப்பதுடன், உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். தொழில்முறையில் பெரும் உயரங்களை எட்ட விரும்பினால், இன்றே படுக்கையில் அமர்ந்து வேலை செய்யும் பழக்கத்திற்கு விடை கொடுங்கள்!