கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணை எதிர்கொண்டு வரும் நிலையில், அதே வழக்கில் தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் சிபிஐ முன்பு ஆஜராகியுள்ளார். கரூர் சம்பவம் நடந்தபோது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தவர் இவர்தான். அன்று கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படிச் செய்யப்பட்டன என்பது குறித்தும், தவெக சார்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கியமாக, தவெக தரப்பு கேட்ட இடத்தைக் காவல்துறை ஒதுக்காததே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாகச் செய்யப்படவில்லை என்றும் கூறப்படும் புகார்கள் குறித்து டிஜிபியிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. விஜய் தாமதமாக வந்தாரா? அல்லது காவல்துறையின் திட்டமிடலில் தவறு இருந்ததா? என்பது போன்ற கோணங்களில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஒரே நாளில் அரசியல் கட்சித் தலைவரும், உயர்மட்டக் காவல் அதிகாரியும் சிபிஐ விசாரணையில் ஆஜராகியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
