தலைநகர் சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் இன்று அதிகாலை நடந்த படுகொலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது.

ரௌடி ஆதி என்பவர், தனது தோழியின் குழந்தையைப் பார்க்க வந்த இடத்தில், மூன்று பேர் கொண்ட மர்ம கும்பலால் பிரசவ வார்டு அருகிலேயே ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள அண்ணாமலை, “திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாகச் செயலிழந்துவிட்டது” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனை போன்ற பாதுகாப்பு மிகுந்த இடத்திலேயே ஒரு கொலை நடக்கிறது என்றால், அது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது என்றும், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கொலை நடக்காத நாட்களே இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

“எதிர்க்கட்சியினரைப் பழிவாங்க மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தும் திமுக அரசு, பொதுமக்கள் பாதுகாப்பு குறித்துக் கவலைப்படவில்லை” என்றும் அண்ணாமலை விளாசியுள்ளார்.

துண்டுச்சீட்டு சாதனைகளைத் தவிர, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சருக்குத் தெரியவில்லை என அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தற்போது அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.