ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் உயிரியல் பூங்காவில் புலி தாக்கியதில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். சுக்னா தேவி, பூங்காவில் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். வழக்கம்போல் புதன்கிழமை காலை புலி அடைக்கப்பட்டிருந்த 16-ஆம் எண் பகுதிக்குள் அவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ‘சிவாஜி’ என்ற புலி அவர் மீது பாய்ந்து தாக்கியது. அருகில் இருந்த ஊழியர்கள் விரைந்து வந்து அவரை மீட்க முயன்றபோதும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக புலி அடைக்கப்பட்டிருக்கும் பகுதியை சுத்தம் செய்வதற்கு முன்பு, அந்தப் புலியை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி அடைக்க வேண்டும். ஆனால், சம்பவத்தின்போது அந்தப் பகுதி திறந்திருந்ததாகவும், பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுக்னா தேவி எப்படி புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சென்றார், அப்போது பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக உயிரியல் பூங்காவுக்கு விரைந்தனர். புலி அடைக்கப்பட்டிருந்த பகுதி உடனடியாக காலி செய்யப்பட்டதுடன், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவம் பூங்கா ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் பீலிபித் மாவட்டத்திலும் புலி தாக்கியதில் 60 வயது விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. வாழைத்தோட்டத்தை கண்காணிக்கச் சென்ற அவரை பதுங்கியிருந்த புலி தாக்கியதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினரும் கிராம மக்களும் தேடிச் சென்றபோது, வயலில் ரத்தக் காயங்களுடன் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடும், வனவிலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தங்கள் பகுதியில் அடிக்கடி புலி மற்றும் சிறுத்தைகள் நடமாடுவதாகவும், இதுகுறித்து வனத்துறையிடம் பலமுறை தெரிவித்தும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களில் புலி தாக்குதல் தொடர்பான சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.