மக்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டிய காவல் நிலையத்திலேயே, புகார் அளிக்க வந்த பெண்ணை ஒரு பெண் போலீஸ் அதிகாரி சரமாரியாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. வாரணாசியில் உள்ள சௌபேபூர் காவல் நிலையத்தில் நடந்த இந்த கொடூரமான சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், காவல் நிலையத்திற்குள் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அங்கு புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணிடம் ஆவேசமாக கத்துவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. “உன்னுடைய தினசரி புகார்களால் நான் ஒட்டுமொத்தமாக சலிப்படைந்துவிட்டேன்; விடிந்தால் போதும் உனக்கு இதே வேலையாகப் போய்விட்டது” என்று கோபத்தில் கத்தியபடி, அந்தப் பெண்ணின் முகத்தில் பளார் பளாரென பலமுறை அறைந்துள்ளார்.
A sub-inspector addressing the grievances of a woman at Chubeypur police station in Varanasi, UP. pic.twitter.com/OELi9Nxsgb
— Piyush Rai (@Benarasiyaa) July 17, 2026
பாதுகாப்பு தேடி வந்த இடத்தில், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு பெண் அதிகாரி சக பெண்ணை இப்படி இரக்கமின்றி தாக்கியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தச் சம்பவம் அங்கிருந்த ஒருவரால் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே வைரலாகி, காவல்துறைக்கு எதிராகப் பலத்த கண்டனக் குரல்கள் எழக் காரணமாக அமைந்தது.
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தற்போது துறை ரீதியான உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்களிடம் இத்தகைய அராஜகப் போக்கில் ஈடுபடும் போலீசாரின் செயல்பாடு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
