விருப்பமுள்ள ஆண்கள் விந்தணுக்களைத் தானம் செய்து, குழந்தையின்மை உள்ள பெண்கள் குழந்தை பெறுவது வெளிநாடுகளில் நடக்கிறது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஓர் இளைஞர், கடந்த 17 வருடங்களாக உடல்நலப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்று விந்தணு தானம் செய்து வந்துள்ளார். ஆனால், சமீபத்தில் அவருக்கு உடலில் ஒரு மரபணுப் பிறழ்வு (Genetic Mutation) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிறழ்வு, புற்றுநோய் வராமல் தடுக்கும் முக்கியமான TP53 என்ற மரபணுவைப் பாதித்துள்ளது. இந்த குறைபாடு அவருக்குப் பிறவியிலேயே இருந்திருக்கிறது.
இந்த மரபணுக் கோளாறு ஆரம்பகாலப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதை விந்து வங்கி இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டறிந்துள்ளது. இந்த இளைஞரின் விந்தணு மூலம் பிறந்த 197 குழந்தைகளில் சிலருக்கு ஏற்கெனவே புற்றுநோய் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; சில குழந்தைகள் இறந்துள்ளனர். இதனால், இந்த இளைஞரின் விந்தணு மூலம் குழந்தை பெற்ற குடும்பத்தினர் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கும் வாழ்நாளில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதால், தற்போது கடும் அச்சத்திலும் மன அழுத்தத்திலும் இருக்கிறார்கள்.
