இங்கிலாந்து லிங்கன்ஷையரில் வசிக்கும் 86 வயது முதியவர் ராய் மார்ஷுக்கு, நடைப்பயிற்சிக்குச் சென்றபோது நேர்ந்த ஒரு எதிர்பாராத சம்பவம், அபராதமாக மாறி உள்ளது.

ஸ்கெக்னஸ் அருகே நடந்து சென்ற ராயிடம், பலத்த காற்றில் பறந்த ஒரு இலை திடீரென வாயிற்குள் வந்தது. ஆஸ்துமா பிரச்சனை காரணமாக அதிர்ச்சி அடைந்த அவர், அந்த இலையையை உடனடியாக வெளியே துப்பிவிட்டார். ஆனால், இந்தச் செயல் ‘குப்பை கொட்டுதல்’ எனப் பொருள்படுத்தப்பட்டதால், உள்ளூர் அதிகாரிகள் அவருக்கு £250 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,000) அபராதம் விதித்தனர்.

பின்னர், அவரது வயது மற்றும் உடல்நிலை கருதி அபராதம் £150 ஆகக் குறைக்கப்பட்டது. தொகையைச் செலுத்திய ராய், சம்பவம் குறித்து அதிர்ச்சி மற்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். இலை திடீரென வாயில் விழுந்ததால், அதைத் துப்புவது தவிர மற்ற வழி இல்லையென ராய் கூறினார். இது திட்டமிட்ட நோக்கத்துடன் செய்யப்பட்ட குப்பை கொட்டல் அல்ல என்றும், இத்தகைய சூழ்நிலைகளில் அதிகாரிகள் அதிக நெகிழ்வுடன் அணுக வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

“என் விளக்கத்தைக் கேட்டிருந்தால் அபராதம் தவிர்க்கப்பட்டிருக்கும். இப்போது வெளியே போவதும் ஒரு பயமாகிவிட்டது,” என்றார். இந்த விசித்திரமான சம்பவம் லிங்கன்ஷையர் மக்களிடையே பெரிய பேச்சு பொருளாக மாறியுள்ளது. ஒரு ‘உதிர்ந்த இலை’ இத்தகைய அபராதத்துக்கு வழிவகுக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராய், “யாராவது இப்படி ஒரு சம்பவத்தை எனக்குப் முன்பே சொன்னால் நானே நம்பியிருக்க மாட்டேன். மேலும் விதிகளைப் பின்பற்றுவது அவசியம், ஆனால் மனித தன்மையை மறக்கக் கூடாது,” என தெரிவித்துள்ளார்.