நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25), மாதுரி விஸ்வகர்மா (20) ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு, கடந்த 6 மாதங்களாக பரமத்திவேலூர் அருகே உள்ள களிமேடு பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் தங்கி பட்டுக்கூடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது மாதுரி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
சம்பவத்தன்று மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்த திலக்நாயக், மீன்குழம்பு ஏன் ருசியாக இல்லை எனக் கேட்டு மனைவி மாதுரியைக் கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த மாதுரி, கணவர் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இரவு வேலை முடிந்து திரும்பிய திலக்நாயக், மனைவி பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
