பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மகன் ஒருவன் செய்த கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையான அந்த இளைஞன், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளான்.
மேலும் தந்தை பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மகன், அவரை சரமாரியாக தாக்கியதுடன், தான் தங்கியிருந்த வீட்டிற்கு தீ வைத்துள்ளான். இந்த கோரமான தீ விபத்தில் அந்த வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து வீட்டை மட்டும் அழிக்காமல், அங்கிருந்த நான்கு ஆடுகளையும் உயிருடன் எரித்துக்கொன்றுள்ளது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் அக்கம் பக்கத்தினரால் உடனடியாக அணைக்க முடியவில்லை.
இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தப்பி ஓடிய மகனை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரு இளைஞன் போதைக்கு அடிமையாகி தனது சொந்த குடும்பத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
