“உனக்கு என் மகனைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னா முதல்லயே எங்ககிட்ட வந்து நேருக்கு நேரா மறுத்திருக்கலாம்; அதை விட்டுட்டு இப்படி ஒரு  கொடூர மனசோட என் 26 வயசுப் பிள்ளையை அந்த லோகட் கோட்டையில இருந்து தள்ளிக் கொலை பண்ணிட்டியே , இதுக்குக் காரணமான அவளுக்கும் அவளோட காதலனுக்கும் நடுரோட்டுல வச்சு மரண தண்டனை குடுக்கணும்!”

என்று புனேவில் கொடூரமான முறையில் தள்ளிக் கொல்லப்பட்ட 26 வயது இளைஞர் கேதன் விஷால் அகர்வாலின் மரணத்தால் துயரமடைந்த பெற்றோர்கள், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் சேதன் சௌத்ரிக்கு எதிராகக் கண்ணீருடன் நீதி கேட்டுப் போராடுவது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.

புனே லோகட் கோட்டையிலிருந்து வழுக்கி விழுந்து கேதன் அகர்வால் இறந்துவிட்டதாக அவரது வருங்கால மனைவி சியா கோயல் நாடகமாடிய நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சிங் கில் தலைமையிலான லோனாவாலா  போலீசாரின் தீவிர  விசாரணையில் இது திட்டமிட்ட  கொலை என்பது அம்பலமாகியுள்ளது.

பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த பின், பாலி நாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டபோது கேதனின் பாஸ்போர்ட்டைத் திருடி விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பியது முதல், ஜூன் 18 அன்று சியா தனது கள்ளக்காதலன் சேதன் சௌத்ரியை பைக் மூலம் கோட்டைக்கு வரவழைத்துக் கேதனை இரும்புப் பொருளால் தாக்கிப் பள்ளத்தாக்கில் தள்ளியது வரை அனைத்தும் அந்த ரகசிய போலீஸ் விசாரணையில் டிஜிட்டல் தொழில்நுட்ப ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்போது இந்த விசித்திரக் கொலை வழக்கில் கைதான காதலர்கள் இருவரையும் புனே மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜூன் 29 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க  உத்தரவிட்டுள்ளது.

“இந்தச் சியா கோயல் எங்ககூடவே ஷாப்பிங் வந்து, ஒண்ணா உக்காந்து ஹோட்டல்ல சாப்பிட்டு நல்லா  நடிச்சு எங்களை ஏமாத்திட்டா, இப்படி ஒரு கள்ளக்காதல் துரோகப் பேய் எங்க வீட்டுக்குள்ள வரும்னு நாங்க கனவுல கூட நினைக்கல” என்று கேதனின் தாய் கதறியது பார்ப்போரின் நெஞ்சைக் கரைய வைத்துள்ளது.

சமூகத்தில் இத்தகைய கொடூரமான வளர்ப்பு முறை மற்றும் கொலைகார மனநிலை எங்கிருந்து வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ள கேதனின் தந்தை, இந்த வழக்கை உடனடியாகத் தனி நீதிமன்றம் மூலம் விரைவுபடுத்தி, நாட்டிற்கே ஒரு தெளிவான எச்சரிக்கை செய்தியை அனுப்பும் வகையில் இருவருக்கும் மிகக் கடுமையான தூக்குத் தண்டனையை அரசு உடனே அறிவிக்க வேண்டும் என கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்;

கள்ளக்காதலுக்காகத் தன் வருங்காலக் கணவனையே கோட்டையிலிருந்து தள்ளிக் கொன்ற இந்த  கொடூர சம்பவம் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.