தமிழக சட்டப்பேரவையின் 17-வது சபாநாயகராக ஆயிரம் விளக்கு தொகுதியின் தவெக எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர் இன்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் மீதான அதீத பற்றால் அரசியலுக்கு வந்த இவர், தொடக்கத்தில் அதிமுகவின் மாநில இளைஞரணி செயலாளராகப் பணியாற்றியவர்.

ஜே.சி.டி. பிரபாகர் மீது எம்.ஜி.ஆர் வைத்திருந்த பாசம் அளப்பரியது. 1980 தேர்தலில் இவரை ஆதரித்துப் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆர், “எனக்கு மட்டும் ஒரு பெண் பிள்ளை இருந்திருந்தால், பிரபாகருக்கே மணம் முடித்து கொடுத்திருப்பேன்” என மனமுருகிப் பேசிய நெகிழ்ச்சியான சம்பவத்தை இன்று சபாநாயகராகப் பொறுப்பேற்ற போது பிரபாகர் நினைவு கூர்ந்தார்.

வில்லிவாக்கம் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றியும் தோல்வியும் கண்ட இவர், கடந்த 2016 தேர்தலில் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் நீடித்த இவர், சில மாதங்களுக்கு முன்புதான் தனது மகனைத் தொடர்ந்து தவெகவில் இணைந்தார்.

50 ஆண்டுகால நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட ஜே.சி.டி. பிரபாகர், தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் சட்டப்பேரவையை வழிநடத்தவுள்ளார்.