நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது, மருத்துவக் கனவோடு காத்திருந்த மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி தேர்வையே ரத்து செய்திருப்பது, ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு படித்த மாணவர்களின் உழைப்பை வீணடித்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முறையில் ஏதாவதொரு குளறுபடி நடப்பது, குறுக்கு வழியில் யாராவது இடங்களைப் பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தை ஏழை மாணவர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளதாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தமிழகத்தில் நீட் தேர்வை நுழையவே விட்டிருக்க மாட்டார் என்றும், இன்று கிராமப்புற மாணவர்கள் அவரது பாதுகாப்பை இழந்து தவிப்பதாகவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.  நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மறுதேர்வை எந்த குளறுபடியும் இன்றி நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, தமிழக கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, இங்கு மட்டும் நீட் தேர்வை நீக்குவதற்கான சட்ட வழிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்துஎடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.