புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படாதது தற்போது மிகப்பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதே மரபு. ஆனால், இன்றைய விழாவில் தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் பாடப்பட்ட பிறகே மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டது. இதற்குப் புதுச்சேரி மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
“தமிழைப் புறக்கணிப்பதா?” எனத் திராவிட இயக்கங்கள் கொந்தளித்துள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற போதும், இதேபோலத் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாகப் பாடப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இப்போது புதுச்சேரியிலும் அதே போன்ற ஒரு நிகழ்வு அரங்கேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
