மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள சிகந்தர் கம்பு பகுதியில் வசித்து வந்த மொன்டி மோரே என்ற புகைப்படக் கலைஞர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசாரும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். அப்போது, அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான தற்கொலைக் கடிதமும், சுவரில் எழுதப்பட்டிருந்த கடைசி குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன.

ஆரம்பக் கட்ட விசாரணையில், இந்த தற்கொலைக்கு ஒருதலைக் காதல் காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. மொன்டி, தன்னைவிட சுமார் 20 வயது மூத்த அண்ணியை  விரும்பி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்தப் பெண் தரப்பில் இதுபோன்ற உறவுக்கு எந்தவிதமான சம்மதமோ, விருப்பமோ  இருந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மொன்டி எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதத்தில், தனது தாயிடம் மன்னிப்பு கேட்டதுடன், குடும்பத்தினரிடம் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பெண் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்றும், தனது மரணத்துக்கு அவரை யாரும் குற்றம் சாட்டவோ தொந்தரவு செய்யவோ கூடாது என்றும் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணின் மீது தனக்கு மிகுந்த பாசம் இருப்பதாகவும் அவர் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதம் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினரிடமும், சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நிலையில், ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.