ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய காதலியை, ஆத்திரத்தில் டிரைவர் ஒருவர் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதிலும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அவரது உடலை பெரிய சூட்கேஸில் அடைத்து, ரயிலில் ஒடிசா மாநிலத்திற்கு எடுத்துச் சென்று வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் விசாரணையில், போலிசெட்டி சுரேஷ் என்ற டிரைவரின் மனைவி கர்ப்பமாக இருந்ததால், வீட்டுப் பணிகளுக்கு உதவ ஒரு இளம்பெண் வீட்டிற்கு வந்திருந்ததாக தெரியவந்தது. நாளடைவில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் சுரேஷின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில், அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ், இளம்பெண்ணை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, நடந்த சம்பவத்தை மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவரது உடலை பெரிய சூட்கேஸில் அடைத்து ரயிலில் ஒடிசா மாநிலத்தின் ராயகடாவுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சூட்கேஸை வீசிவிட்டு, மீண்டும் விசாகப்பட்டினம் திரும்பியுள்ளார். பின்னர், அங்கு கிடந்த சூட்கேஸை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் கிடைத்த தடயங்களை வைத்து ஒடிசா போலீசார் விசாகப்பட்டினம் சென்று சுரேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
