தமிழக முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டின் நியமனம், தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த ரத்தன் பண்டிட், ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து, பின்னர் டெல்லி மற்றும் சிங்கப்பூர் வரை தனது செல்வாக்கை விரித்தவர்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று இவர் கணித்ததாகவும், இவரது ஆலோசனையின் பேரிலேயே கட்சியின் பெயரில் ‘V’ (தமிழக வெற்றிக் கழகம்) என்ற எழுத்து இடம்பெற்றது மற்றும் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, விஜய் போட்டியிட்ட தொகுதிகளைத் தேர்வு செய்ததிலும், அவர் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்குச் சென்றதிலும் ரத்தன் பண்டிட்டின் பங்கு முக்கியமானது எனச் சொல்லப்படுகிறது.
விஜய்யின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த இவருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்ட நிலையில், சட்டசபை வரை எதிர்ப்புக் கிளம்பியதால் ஒரே நாளில் அந்த உத்தரவைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
